மார்ச் மாதத்திற்குள் 3 செயற்கைக்கோள் ராக்கெட்டுகள் விண்ணில் செலுத்தப்படும் - இஸ்ரோ தலைவர் டாக்டர். கே. சிவன் தெரிவித்தார்.
கார்ட்டோசாட் – 3 செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்ட பிறகு, ஸ்ரீஹரிகோட்டாவில் விஞ்ஞானிகளிடையே உரையாற்றிய இந்திய விண்வெளி ஆய்வுக்கழகமான இஸ்ரோவின் தலைவர் டாக்டர்.கே.சிவன், பிஎஸ்எல்வி – சி 47 ராக்கெட் மூலம் கார்ட்டோசாட் – 3 செயற்கைக்கோள் திட்டமிட்டபடி விண்ணில் செலுத்தப்பட்டது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது என்றார்.
கார்ட்டோசாட் – 3 மற்றும் அதனுடன் செலுத்தப்பட்ட அமெரிக்காவின் 13 நானோ செயற்கைக்கோள்களும் அவற்றின் புவி வட்டப்பாதையில் செலுத்தப்பட்டதாகக் கூறினார். கார்ட்டோசாட் – 3 செயற்கைக்கோளில் துல்லியமாக படமெடுக்கக்கூடிய அதிநவீன கேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்திய திட்ட இயக்குநர் மற்றும் ஒட்டுமொத்த இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கும் அவர் தமது பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.
இஸ்ரோ விஞ்ஞானிகள் எத்தகைய சவால்களையும் எதிர்கொண்டு வெற்றிகரமாக நிறைவேற்றி முடிப்பார்கள் என்றும் டாக்டர்.சிவன் தெரிவித்தார்.
அடுத்த கட்டமாக, வருகிற மார்ச் மாதத்திற்குள் 13 திட்டங்களை செயல்படுத்துவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் திரு.சிவன் குறிப்பிட்டார். 6 செலுத்து வாகனங்கள் மற்றும் 7 செயற்கைக்கோள்கள் மார்ச் மாதத்திற்குள் விண்ணில் செலுத்தப்படவிருப்பதாகவும் அவர் கூறினார்.